உள்ளாட்சி தேர்தலில் ஆட்டம் கண்ட கமல் கட்சி: ஓரிடத்தில் கூட ஜெயிக்கல; பலரோட டெபாசிட் போச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. ஏராளமான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த பரிதாபமும் நடந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து அவரை முந்திக்கொண்டு, திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த், அரசியலில் குதிக்கும் திட்டத்தை கைவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன் கட்சி வெற்றி பெற முடியவில்லை.

பிறகு இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஐஜேக, சமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அவரது கட்சி படு தோல்வி அடைந்தது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசனும் வெற்றி பெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தை விட குறைவாக வாங்கியது மநீம. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த பொதுச்செயலாளர் மகேந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கூண்டோடு கட்சியை விட்டு விலகினர். ஆனாலும் நான் அரசியலை விட்டு போக மாட்டேன் என ஆவேசமாக அறிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இந்த தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டேன் என்றும் தனித்தே போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டுவோம் என்றும் வீர ஆவேசமாக கூறினார் கமல்ஹாசன். 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கும் கணிசமான வேட்பாளர்களை அந்த கட்சி நிறுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தை கூட மநீம பெற முடியவில்லை. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் ஏராளமான மநீம வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சைகள் கூட ஆங்காங்கே ஜெயித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனால் ஓரிடத்தில் கூட தனது கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் 9 மாவட்டங்களுக்கும் திட்டமிட்டு, அவரே தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது பிரசாரமும் எடுபடவில்லை. இது மநீம கட்சியினரை பலத்த சோர்வடைய செய்துள்ளது. ‘கமல்ஹாசனின் கட்சிக்கு என தனி கொள்கைகள் எதுவும் இல்லை. அவரது அரசியல் அறிக்கைகள் கூட மக்களை கவரும் விதத்தில் இல்லை. பெரும்பாலும் 2 வரிகளில் டிவிட்டரிலேயே அவர் கருத்துகளை வெளியிட்டு விடுகிறார். அது மக்கள் வரை சென்றடையவில்லை. அவரது பேச்சும் அரைகுறையாகவும் குழப்பமாகவும் இருக்கிறது’ என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

More
>