ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்: பூஜை பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள்

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்கு தேவையான பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற ெபாருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் தொழில்வளம் பெருக தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி அதற்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அதைப்போன்று மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுவார்கள் இதற்காக பொதுமக்கள் தங்களது வீடுகளில் பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களை மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்றே  தொடங்கியது. கடைசி நாளான இன்று விற்பனை மேலும் களை கட்டும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் பொருட்களை வாங்க ஒவ்வொருவரும் காலையில் இருந்தே வரத் தொடங்கினர். இதனால், விற்பனை களை கட்டியது. மாலையில் மேலும் விற்பனை விறுவிறுப்படைந்தது.

ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென விலை உயர்ந்தது. அதாவது கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கடந்த வாரம் ஆப்பிள்(1 கிலோ) ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. இது தற்போது 100 முதல் ரூ.150 வரை தரத்துக்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. ரூ.25, ரூ.30க்கு விற்கப்பட்ட சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ.60 வரை தரத்துக்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. இதே போல கொய்யாப்பழம் ரூ.20 லிருந்து ரூ.40, மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது.

இது கடந்த வாரத்தை விட ரூ.50 அதிகமாகும். மேலும் மாதுளம்பழம், அண்ணாச்சி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாக விற்கப்பட்டது. அதிக விலைக்கு பூஜை பொருட்கள் விற்கப்பட்டாலும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வீடு மற்றும் தொழிற்சாலைகள், கம்பெனிகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Stories: