புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வழக்கு : திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி:புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நீதிமன்றத்தில், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை புதுச்சேரி அரசு திரும்பப் பெற்றது.

இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வழக்கு உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன்? என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். மேலும் மனுவுக்கு முழுமையான விபரங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக். 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா சார்பில், இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல், புதுச்சேரி தேர்தல் வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடப்பதால், இவ்வழக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது தொடர்பாக மேலும் 4 மாதம் அவகாசம் கோரியுள்ளது.

Related Stories: