ஊரக உள்ளாட்சி தேர்தல் கிராமபுறங்களிலும் ‘மாஸ்’ காட்டிய திமுக கூட்டணி

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கிராமபுறங்களிலும் திமுக கூட்டணி ‘மாஸ்’ காட்டியது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடந்தது. இதற்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் திமுக 10 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும், காங்கிரஸ் 3 இடத்திலும் போட்டியிட்ட நிலையில், அனைத்திலும் திமுக கூட்டணியே முன்னணியில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 122 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக 83 இடங்களையும், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் ஒரு இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

மொத்தம் 91 இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. அதிமுக 13 இடங்களிலும், கூட்டணி கட்சியான பாஜ 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. அமமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 13 இடங்களில் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 144 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் 93 இடங்களில் திமுகவினர் முன்னணியில் உள்ளனர். அதிமுக 11 இடங்களிலும், மதிமுகவினர் 11 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும், சுயேச்சை 8 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஆகிய 7 ஒன்றியங்களில் 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளது. 13 இடங்களை திமுகவும், 1 இடத்தை காங்கிரசும் கைப்பற்றியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 7 ஒன்றியங்களில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. இதில் 10 இடங்களை திமுகவும், 1 இடத்தை காங்கிரசும் கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஒன்றியங்களில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் 11 இடங்களில் திமுக, 1 இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்புசண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட முத்துக்கருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட லதா தாமரைச்செல்வன் வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எல்லப்பன் வெற்றி பெற்றார்.

திருவாரூர் மாவட்டம் 11 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றார். கரூர் மாவட்டத்தில் 8வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் பெற்று வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்டம், 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிசாமி வெற்றி பெற்றார்.  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றிய 15வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் ராக்கெட் ரமேஷ் வெற்றி பெற்றார்.

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் 30வது வார்டு கவுன்சிலர் பதவிகான தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் 5வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்ரமணியன் வெற்றி பெற்றார். திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக்குழு 13வது உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் கிராமபுறங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளது.

இளம்வயதில் ஒன்றிய கவுன்சிலர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் மானூர் ஒன்றியத்தில் 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட லேகா (22) வெற்றி பெற்றார். பொறியியல் பட்டதாரியான இவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று இன்று அதிகாலை வெற்றி சான்றிதழை பெற்று கொண்டார்.

சிவந்திபட்டி பஞ். தலைவராக 90 வயது மூதாட்டி வெற்றி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெருமாத்தாள் என்ற 90 வயது மூதாட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து செல்வராணி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் பெருமாத்தாள் 1,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வராணி, 426 வாக்குகள் பெற்றார். இதுகுறித்து பெருமாத்தாள் கூறுகையில், ‘எங்களது குடும்பம் திமுக பாரம்பரியமிக்கது. சிவந்திபட்டி பஞ்சாயத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

உறவினரின் வெற்றி அறிவிப்பை கேட்டவர் மயங்கி விழுந்து சாவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது அரசமலை ஊராட்சி மன்ற தலைவராக பழனிவேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட பழனிவேலுவின் உறவினர் முருகன் (50) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பழனிவேலு வெற்றி அறிவிப்பை கேட்ட முருகன், மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>