×

தொடர் விடுமுறை எதிரொலி; சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு: கட்டணம் பல மடங்கு எகிறியது

மீனம்பாக்கம்: தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை ஆயுத பூஜை, விஜயதசமியை தொடர்ந்து அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறைகள் வருவதால் சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

விமான நிலையங்களில் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு புறப்பாடு, வருகை பயணிகள் 15 ஆயிரமாக இருந்தது. இன்று 213 விமானங்களாக அதிகரித்து புறப்பாடு, வருகை பயணிகள் 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 23 விமானங்களும் 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்துள்ளது.

நாளை பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமான நிலையத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கையும் விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் விமானநிலைய வட்டாரத்தில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டு விமான கட்டணங்களில் திடீர் உயர்வு பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 மாக இருந்த கட்டணம் நேற்று ரூ.6 ஆயிரமாக அதிகரித்து உள்ளது.

இந்த கட்டணம் இன்று ரூ.7,500 ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.3,500 ஆகத்தான் இருந்தது. ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளது என்று கூறி, ஒன்றிய அரசு அடுத்தடுத்து 2 முறை கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தது. இதனால்தான் தூத்துக்குடிக்கு ரூ.3,500 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. ‘’ வழக்கமாக கூட்டம் அதிகரிக்கும்போது அவர்களாகவே கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்’ என்று பயணிகள் கூறுகின்றனர்.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரூ செல்லும் விமான கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட சீட்கள் மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற சீட்களுக்கு 2 அல்லது 3 விதமான கட்டணங்களை நிர்ணயித்திருப்போம். முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும் அதன்பின்பு வருகின்றவர்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும்.

இதுதான் நடைமுறையில் உள்ளது’ என்றனர். ‘‘பண்டிகை காலம் மற்றும் சீசன் நேரங்களில் விமான நிறுவனங்கள் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை கொடுக்காமல் அனைத்து டிக்கெட்டுக்களையும் அதிகமான கட்டண டிக்கெட்டுக்களாக மாற்றிவிடுகின்றனர். தனியார் ஆம்னி பஸ்கள் போல் விமான நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன’ என்று பயணிகள் தங்களது குமுறல்களை தெரிவித்தனர்.

Tags : Chennai Domestic Airport , Echo of the series holiday; Passenger arrivals continue to increase at Chennai Domestic Airport: Fares skyrocketed
× RELATED சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி