மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 20.28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி  வைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், நோய் ஆதரவுச் சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துகின்றனர்.

முதற்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் கிராம மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று வரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 8,48,568 பேர், நீரிழிவு நோய் உள்ள 5,85,002 பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ள 4,17,745 பேருக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் 65,536 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 1,11,281 பேருக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதை தவிர்த்து 420 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் நேற்று வரை மொத்தம் 20,28,605 பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>