×

இது குடிக்க அல்ல... வெடிக்க... சிவகாசியில் ‘டின் பீர்’வடிவில் பட்டாசுகள்: மது பிரியர்களை கவர புதிய டெக்னிக்?

சிவகாசி: சிவகாசி பட்டாசு கடைகளில் டின் பீர் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட ‘டின் பவுண்டேன்’ பட்டாசுகள் மது பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது.தீபாவளி திருவிழாவிற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகின்றது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடைகளில் புது ரக பட்டாசுகள் அணிவகுக்கின்றன.

சில பட்டாசு கடைகளில் பார்த்த உடன் பீர் டின்னா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை பட்டாசுகளுக்கு  முன்னணி பீர் நிறுவனங்களின் பெயர்களை சில எழுத்து மாறுதல்களுடன் வைத்துள்ளனர். பார்த்தவுடன் புதுவிதமாய் தோன்றும் இந்த பட்டாசுகள் பூச்சட்டி ரகத்தில் புதுவிதமாக செய்யப்பட்டுள்ளது. பீர் டின் போன்று மேலே ஓப்பன் செய்து அதில் உள்ள திரியை பற்ற வைத்தால் 15 அடி வரை உயரே சென்று  பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் பொறிப்பொறியாய் பீறிட்டு மினுமினுக்கும். மது பிரியர்களை கவரும் வகையில் இந்த பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.



Tags : Sivakasi , It's not to drink ... to explode ... Firecrackers in the form of ‘tin beer’ in Sivakasi: New technique to impress wine lovers?
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து