எல்லாவிதமான நிலத்திலும் வளரும் பலாமரம்: ஹெக்டேருக்கு 30 டன் வரை அறுவடை

முக்கனியின் 2வது கனியான பலா குமரி மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பலாபழம் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக எடையுள்ள பழங்களை தரவல்லது பலாமரம். ஒரு கிலோவிலிருந்து 100 கிலோவிற்கு மேலான எடையுள்ள பழங்களை பலாமரம் தருகிறது. பலாபழங்களை மதிப்பூட்டு பொருட்களாக சந்தைப்படுத்தியும் வருகின்றனர். பேக்கரிகளில் பலாக்காயில் உள்ள சுளையை எடுத்து பலாக்காய் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிப்சுகள் குமரி சுற்றுலா தலங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும். கொரோனா தொற்று காரணமாக கடந்த சீசனில் பலாபழம் விற்பனை குமரி மாவட்டத்தில் மந்தமாக இருந்தது.

பலாமரத்தில் வெளிப்பலா, சிங்கப்பூர் பலா, ஒட்டுப்பலா, பண்ருட்டி, பர்லியார் 1, பிஎல்ஆர் 1, பிபிஐ 1 மற்றும் பிஎல்ஆர்(ஜே) 2 போன்ற ரகங்கள் உள்ளன. பலா மரங்களை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரையுள்ள பிரதேசங்களில் பயிரிடலாம். எல்லாவிதமா நிலத்திலும் நன்கு வளரும், ஆனால் நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதியும் உள்ளதாக இருக்க வேண்டும்.  பலாமரம் நடும்போது நிலத்தை நன்றாக உழுது பின்பு, 1 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் செடி நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு 10 கிலோ தொழுஉரத்துடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு இடவேண்டும். பொதுவாக ஒட்டுச்செடிகளை 8x8 மீட்டர் இடைவெளியில் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் நடவேண்டும். செடிகள் நன்றாக வளரும் வரை வாரம் ஒரு முறையும், பின்பு தேவைப்படும்போது நீர் பாய்ச்சவேண்டும். ஒரு வருடம் ஆன செடிக்கு 10 கிலோ தொழுஉரம், 15 கிராம் தழைச்சத்து, 8 கிராம் மணிச்சத்து, 10 கிராம் சாம்பல் சத்து இடவேண்டும். அதுபோல் வருடம் வருடம் 10 கிலோ தொழுஉரம், 15 கிராம் தழைச்சத்து, 8 கிராம் மணிசத்து, 10 கிராம் மணிச்சத்து இடவேண்டும். 6 வருடம் கடந்த மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 75 கிராம் தழைச்சத்து, 45 கிராம் மணிச்சத்து, 50 கிராம் சாம்பல் சத்து ஆகியவை போடவேண்டும்.

 மேலும் ஒரு வருடம் ஆன மரத்திற்கு 310 கிராம் இப்கோ காம்ப்ளக்ஸ், 260 கிராம் யூரியா, 33 கிராம் பொட்டாஷ் இதே உரத்தை இதே அளவில் வருடா வருடம் போடவேண்டும். 6 வருடத்திற்கு பிறகு 1.540 கிலோ இப்கோ காம்ப்ளக்ஸ், 1.300 கிலோ யூரியா, 170 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களையும் போடவேண்டும். இந்த உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும் என இரண்டு முறை பிரித்து இடவேண்டும். பலா மரத்தை வண்டு போன்ற ஒரு வகைப் பூச்சிகள் தாக்குகிறது. இதனை தடுக்க மிதைல் பாரத்தியான் 50 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது நடுத்தர வயதுடைய மரங்களுக்கு மீதைல் பாரத்தியான் 2 சதவிகிதம் அல்லது குயினால்பாஸ் தூவும் மருந்து 1.5 சதவிகிதம் மருந்தை மரம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தூவவேண்டும்.

மரத்தில் அழுகல் நோய் தென்பட்டால் கட்டுப்படுத்த ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.  விதைகள் மூலமாக வளர்ந்த மரங்கள் 8 வருடங்களில் காய்ப்புக்கு வரும். ஆனால் ஒட்டுக்கட்டப்பட்ட செடிகள் 5 வருடங்களிலே காய்ப்புக்கு வரும். பழங்களை மார்ச் மாதம் முதல் ஜூலை வரை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பலாமரத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு 30 டன் முதல் 40 டன்வரை பலா பழம் அறுவடை செய்யலாம். என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய வாரியாக சாகுபடி

குமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட பகுதியில் பலாமரங்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கிழக்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக பலாப்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பலாமரம் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் பகுதி ஒன்றியம் வாரியாக வருமாறு; அகஸ்தீஸ்வரம் 1 ஹெக்டேர், ராஜாக்கமங்கலம் 29 ஹெக்டேர், கிள்ளியூர் 104 ஹெக்டேர், குருந்தன்கோடு 102 ஹெக்டேர், மேல்புறம் 51 ஹெக்டேர், தக்கலை 107 ஹெக்டேர், திருவட்டார் 50 ஹேக்டேர், தோவாளை 44 ஹெக்டேர், முஞ்சிறை 101 ஹெக்டேர், என மாவட்டம் முழுவதும் 589 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பலாப்பழத்தின் பயன்கள்

 நார்ச்சத்து அதிகம் கொண்டது பலாப்பழம். மேலும் அல்சர், செரிமானக்கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு, ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்தது. பலாப்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடலுக்கு பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழங்களை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

பலாப்பழத்தில் வைட்டமின் சியுடன் புற்றுநோய்யை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான மிக்னைன்கள், ஐசோப்னேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டின் ஏ உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைக் தடுக்கலாம். இதில் பொட்டாசியம் அதிகம் இருபப்பதால், உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

Related Stories:

More
>