×

கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: தீபாவளி பண்டிகைக்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் சொந்த ஊரான ராமாநபுரம், சிவகங்கை மாவட்டங்கள் திரும்புவதற்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்சு நூற்பாலை, பனியன், மோட்டார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதுதவிர திருச்செங்கோடு, அந்தியூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். தீபாவளி விடுமுறைக்கு மாணவர்கள், தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பார்க்கவும், பண்டிகையை கொண்டாடவும் சொந்த ஊர்களுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை.

பண்டிகையை கொண்டாட கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் உள்ள பஸ்ஸ்டாண்டுகளிலும், டெப்போக்களின் முன்பும் மணிக்கணக்கில் காத்துகிடக்கும் அவலம் ஆண்டுதோறும் நீடித்து வருகிறது. பஸ் வசதியும் போதுமான அளவில் கிடைக்காததால் பல குடும்பங்கள் தீபாவளியன்று மதியத்திற்கு மேல்தான் ஊர்போய் சேருகின்றனர்.இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், ‘மதுரையிலிருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, வழியாக போத்தனூர் வரை அகலப்பாதை பணிகள் முடிந்து கோயம்புத்தூருக்கு ரயில் போக்குவரத்து துவங்கி பல ஆண்டுகளாகிறது. பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை அகலப்பாதை பணிகள் முடிந்தும் ராமேஸ்வரம் வரை ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலை, படிப்பிற்க்காக சென்றவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

இதனால் தென்மாவட்ட மக்களுக்கு பண்டிகைக்கால ரயில் பயணம் கனவாகவே இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் போல கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயிலை இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயடைவர். தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

தொழில் நகரங்களையும் ெகாஞ்சம் கவனிங்க
தீபாவளிக்கு ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு மட்டுமே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஊர் திரும்ப சிறப்பு ரயில்களை இயக்குவதில்லை. இதனால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு வருவதற்கு பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

Tags : Kovai ,Rameswara ,Diwali , Will there be special trains from Coimbatore to Rameshwaram for Diwali ?: Public expectation
× RELATED என் மார்க்கெட் பற்றி யோசிக்க மாட்டேன்: மோகன்