தன்னிச்சையாக செயல்படும் புதுவை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யுங்கள்!: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராவிட்டால் அது சமூக நீதிக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையரை நீக்கம் செய்து தேர்தல் நடத்திய அனுபவம் உள்ளவரை வைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராமல் தேர்தலை நடத்த முற்பட்டால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கள் தெருவில் இறங்கி போராட்டம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். எல்லா சமுதாயத்தினருக்கும் சம அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அது இல்லாமல் தேர்தல் நடத்துவது என்று என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்திருப்பது துரதஷ்டவசமானது. மாநில அரசுக்கு இது வெட்கக் கேடு. இதையெல்லாம் மாநில தேர்தல் ஆணையர் புறக்கணித்துவிட்டார். அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். தேர்தல் தள்ளிவைப்புக்கு காரணமாக இருந்ததற்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கின்ற தாமஸ், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தியிருக்கிறார்.

Related Stories: