கொரோனா பெருந்தொற்றால் வறுமைக்‍கு தள்ளப்பட்ட 10 கோடி பேர்!: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனை..!!

ஜெனிவா: கொரோனாவால் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. இந்தியாவில், கொரோனாவை ஒழிக்க ஒன்றிய அரசு முழு மூச்சாகச் செயல்பட்டு வருகிறது. மக்களும் அரசுக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் தொற்று நோயை ஒழிக்க மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் அன்றாட பணியாளர்கள் மற்றும் சிறு தொழில் புரிவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், போதுமான சுகாதார பராமரிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும்கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கியுள்ளதாக கூறியுள்ள அவர், வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

More
>