வாலாஜாபாத் அருகே சோகம்: சுவர் இடிந்து விழுந்து அண்ணன், தங்கை பலி.!

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே நள்ளிரவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் அண்ணன், தங்கை உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் காலனியை சேர்ந்தவர் மணி, கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி வள்ளி.  புத்தகரம் கால்நடை மருத்துவமனை அருகே, குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்கு பிரகாஷ் (30) என்ற மகனும், துர்காதேவி (26) உள்பட 3 மகள்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அதில் பல நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாத பகுதிகளில், மழைநீர் சாலையில் தேங்கி, கழிவுநீருடன் கலந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மணி, தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், இவர்கள் வசிக்கும் குடிசை வீட்டின் பக்கவாட்டு சுவர், மழைநீரால் உறைந்து, திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். துர்காதேவி படுகாயமடைந்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த துர்காதேவியை சிகிச்சைக்காகவும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்காதேவி நேற்று பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>