×

கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததால் செக் அணை, ஏரிகளுக்கு மதகுகள் வாங்க கிடுக்கிப்பிடி: பழுது ஏற்பட்டால் ஒப்பந்த நிறுவனமே பொறுப்பு; நீர்வளத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: அணைகள், ஏரிகளில் புதிதாக வாங்கப்படும் மதகுகளில் பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தான் பொறுப்பு என்று நீர்வளத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக நீர்வளத்துறையில் 89 அணைகள், 14,098 ஏரிகள் உள்ளன. இந்த அணைகள் மற்றும் ஏரிகளுக்கு புதிதாக ஷட்டர் தயாரிப்பது மற்றும் அதற்கு தேவையான போல்ட், அரசு முத்திரை அச்சு தயார் செய்வது உட்பட அனைத்து உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக நீர்வளத்துறையில் அணை பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ் பணிமனை மற்றும் பண்டகசாலை சென்னையில் இயங்கி வந்தது.

இதில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ படித்த மெக்கானிக் பொறியாளர்கள், ஐடிஐ படித்த பிட்டர், வெல்டர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தான் அணை, ஏரிகளில் ஷட்டரில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சென்று சரி செய்வது, புதிதாக தயார் செய்யப்பட்ட ஷட்டரை பொருத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்னர். இந்நிலையில் நாளடைவில் பணி ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களால் அங்கு ஷட்டர், போல்ட் தயாரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால்  புதிதாக ஷட்டர் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஷட்டர் வாங்கும் அனைத்து பணிகளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது. ஷட்டருக்கான விலை கூட தனியார் நிறுவனம் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டன. அவர்கள் சொல்லும் விலையில்தான் ஷட்டர் வாங்கப்பட்டன. இதனால், அவர்கள் கூடுதல் விலைக்கு தங்களது இஷ்டப்படி நிர்ணயம் செய்தனர். ரூ.50 லட்சம் மதகுகள் ரூ.1 கோடி வரை போட்டு அதில் சம்பாதித்தனர். இந்த ஷட்டர் பழுதானாலோ அவற்றை  சரி செய்ய வேண்டும் என்றால் அந்த நிறுவன ஊழியர்கள் தான் வர வேண்டிய நிலை உள்ளது. மேலும், இதற்கான பராமரிப்பு கட்டணம் கூட நீர்வளத்துறை மூலம்தான் தர வேண்டும்.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மதகுகள் வாங்குவதில் கிடுக்கிப்படி உத்தரவு ஒன்றை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பிறப்பித்துள்ளார். அதன்படி, அணை, ஏரிகள், கதவணை, தடுப்பணைகளுக்கு மதகுகள் பொருத்தும் போது, அவற்றை நேரில் ஆய்வு செய்து, மதகுகள் தரமாகவும், சரியாகவும் இருக்கிறதா என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், மதகுகளுக்கான விலை நிர்ணயம் சரிதானா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் மட்டுமே பில் தொகை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பேரில் தற்போது அணைகளுக்கு புதிதாக மதகுகள் வாங்கினால் கூட நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அணைகள் பாதுகாப்பு இயக்ககத்தின் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்கின்றனர். அவர்கள் ஷட்டர் பொருத்தப்ப்டட பிறகு, அவற்றை தரத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், மதகுகளில் பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் பொறுப்பு என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Czech , Czech dam, lakes to buy leaks due to misappropriation of millions during the last regime: the contractor is responsible if repairs occur; Water Resources Action Order
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி