மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட விவகாரம் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் 23 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: மாவோயிஸ்ட்கள் தொடர்பான ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க் பறிமுதல்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் வசித்து வரும் கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் 23 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் சிலர் தங்கி ஆயுதப்பயிற்சி செய்வதாக இன்டர்போல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி கடந்த 2019 அக்டோபர் மாதம் அட்டப்பாடி வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்களை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்த மணிவாசகன், பெரியகுளம் அருகே உள்ள எண்டர்புளி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் உட்பட 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் தாக்குதல் நடத்துவதற்கான இடம் உள்ளிட்ட குறிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு கேரள காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்னிந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

 அப்போது, சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் உடலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யும் போது, மணிவாசகம் மனைவி கலா, சகோதரி லட்சுமி, மைத்துனர் சாலிவாகனம் ஆகியோர் அரசுக்கு எதிராகவும, மணிவாசகம் இறப்புக்கு பழி தீர்ப்போம் எனவும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து புகாரின்படி போலீசார் உயிரிழந்த மாவோயிஸ்ட் மணிவாசகன் மனைவி கலா, சகோதரி லட்சுமி, மைத்துனர் சாலிவாகனம் மற்றும் மாவோயிஸ்ட் தொடர்புடைய மற்றொரு நபர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தற்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூத்தி நகரில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் பெரிய அளவில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அதற்கான முக்கிய ஆவணங்கள் சில கேரளாவில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின்படி என்ஐஏ அதிகாரிகள் கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்புடைய நபர்கள் வீடுகள் என 23 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக, ஆயுதப்பயிற்சியின் போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகனுக்கு சொந்தமான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஆருகே உள்ள ராமமூர்த்தி நகரில் உள்ள வீடு, அவரது சகோதரி லட்சமி வீடு, மைத்துனர் சாலிவாகனம் வீடு என 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் கோவை மாவட்டம் புலியகுளம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த பல் டாக்டர் தினேஷ் (31) வீட்டில் சோதனை நடத்தினர். கடந்த பிப்ரவரி 4ம் தேதி கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களில் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து பல் டாக்டர் தினேஷை கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது பல் டாக்டர் தினேஷ் கேரள சிறையில் உள்ள நிலையில் அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தினேசுடன் தொடர்பில் உள்ள அவரது நண்பர்களான பொள்ளாச்சியில் உள்ள சந்தோஷ் மற்றும் சுங்கத்தில் உள்ள டேனிஸ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள பொன் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (45). இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இவரை சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது காளிதாஸ் அளித்த தகவலின்படி அவரது சகோதரர் சிங்காரத்தின் வீட்டில் ேநற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் உள்ள பாவலர் தெருவை சேர்ந்த கார்த்திக் (37) என்பவரின் வீட்டில் என்ஐஏ கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், ஆயுதப்பயிற்சியின் போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் வீட்டில் என்ஐஏ ஆய்வாளர் சசிரேகா தலைமையில் அதிரடி சோதனை நடத்தி சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை வில்லிவாக்கம், அம்பத்தூர் உட்பட 5 இடங்களில் மாவோயிஸ்ட்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வரும் நபர்கள் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மாவோயிஸ்ட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா, கர்நாடகா, தமிழகம் என ஒரே நேரத்தில் 23 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால் தென்னிந்தியாவில் பெரிய அளவில் நடைபெற இருந்த சதித்திட்டம் குறித்த ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவில் பெரிய அளவில் நடைபெற இருந்த சதித்திட்டம் குறித்த ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: