100 ஆண்டு பழமையான கோயில்களில் புதிய கட்டுமான பணிகளுக்கு தடை: அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை

சென்னை: 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோயில்களில், புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதும், கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் போன்றவை பேணி பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் கோயில் நிர்வாகங்கள் சுணக்கம் காட்டி வருவதும் அறிய முடிகிறது. எனவே, கோயில் திருப்பணி மற்றும் கட்டுமான பணிகளின்போதும் கோயில்களில் பராமரிப்பு தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

* கோயில்களில் உள்ள கட்டுமானங்களில் சுண்ணாம்பு அல்லது வண்ணப்பூச்சுகள் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் இருப்பின் அவற்றை ஆவணப்படுத்தவும், பேணி பாதுகாக்கவும், பராமரிக்கவும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும், கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவர் ஓவியங்களின் சிதைவுகள் ஏற்படும் முன்னதாக தகுதியான வல்லுநர்களின் உதவியுடன் அவற்றை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களில் எந்த வகையிலான புதிய கட்டுமானங்களையும் ஏற்படுத்தக்கூடாது. கல்கட்டுமானங்களில், கல்பகுதிகளை சேதம் உண்டாக்கும் வகையிலான செயல்களை மேற்கொள்ள கூடாது.  கோயில்களில் மொசைக் தரை அமைக்க கூடாது. கோபுரங்கள், விமானங்களில் ஒலிப்பெருக்கிகள், ஒளிரும் கோயில் பெயர் பலகைகள் மற்றும் தெய்வக்குறியீடு பலகைகள் பொருத்த கூடாது.

Related Stories: