×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகரில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் 60 சதவீதம் நிறைவு: அக்.18ம் தேதிக்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை; நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தங்கு தடையின்றி மழை நீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாரும் பணி மேற்கொள்ள ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் 7ம் தேதி பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, பணிகள் துவக்கப்பட்டு, தற்போது வேகமாக நடந்து வருகிறது.

கால்வாய்களில் வெள்ள தடுப்பு பொருட்கள் வைப்பது, கரைகளில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்த கரைகளை மூடுவது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முட்செடிகள், ஆகாய தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, ஒப்பந்த நிறுவனம் சார்பில் மிதக்கும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்த நிறுவனங்கள் தினசரி நடக்கும் பணிகளை விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது வரை 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று நீர்வளப்பிரிவு சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோர் தூர்வாரும் பணிகள் நடந்து வரும் இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விரைவில் பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கினர். இப்பணிகளை முடித்தால் தான், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள வெள்ளப்பெருக்கை முறையாக வாய்க்கால் வழியாக வடிவதற்கு ஏதுவாக அமையும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Water Resources , 60 per cent completion of canal dredging works in Chennai as a precaution against northeast monsoon: action to be completed by Oct. 18; Water Resources Officer Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...