முதல்வர் உத்தரவை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: உணவு பொருள் தரம் குறித்து ஆய்வு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து, சென்னையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக  உள்ளதா என்று ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான, தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் உணவு தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதன் ஒருகட்டமாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, எழும்பூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா, என்.எச்.ஜெயகோபால் உள்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, குடிநீர் உள்ளிட்டவை தரமானதாக வழங்கப்படுகிறதா, அந்த பொருட்கள் உரிய காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வும் நடத்தினர். சமையலறைக்கு சென்று  பாத்திரங்கள் முறையாக தூய்மைப்படுத்தப்படுகிறதா என்றும், சாப்பாட்டுக்கு தயாராகியிருந்த முட்டை, கீரை உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு பார்த்து தரம், சுவை உள்ளிட்டவற்றையும அதிகாரிகள் ஆராய்ந்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்பு, தரமான சாப்பாடு தயாரிப்பது குறித்து அறிவுரை வழங்கினர். ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ”தமிழக அரசின் உத்தரவுப்படி குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அடிக்கடி நடத்தப்படும்” என்றனர்.

Related Stories:

More