×

திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா

* முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
* தமிழ்நாட்டில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்தும், காணொலிக் காட்சி வாயிலாக டெல்லியிலிருந்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் லிமிட்., சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் ‘பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா’ தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா திட்ட விழாவில் பங்கெடுத்துள்ள ஒன்றிய அமைச்சர்களான நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், வி.கே.சிங் ஆகியோருக்கு எனது முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப் போகிறது. இந்த பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இணைக்க வழிவகை செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமைய இருக்கிறது. அதேபோல், உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இதில் இருக்கின்றன.

ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம், சேமிப்புக் கிடங்கு, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, இயந்திரங்கள் மூலம் சரக்குகளை கையாளுதல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இதன் மூலம், சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில் குறையும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சரக்குப் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்ய தொடங்கி இருக்கிறோம்.

சரக்குப் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை’ தயாரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கென, டிட்கோ சார்பில் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது. தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. டிட்கோ, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் இந்த புதுமையான முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 10,000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழ்நாட்டில் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு உதவ வேண்டுமென ஒன்றிய அமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும், பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தை துரிதப்படுத்தவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், இந்த விரைவுச் சாலையை, சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை தரும் என உறுதி அளிக்கிறேன். இப்போது அமைய உள்ள பல்முனையப் சரக்கு போக்குவரத்துப் பூங்காவில் ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத் தர வேண்டும். இவற்றை விரைந்து வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Muppet ,Tiruvallur district , 1,200 crore multi-purpose freight park at Muppet in Tiruvallur district
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...