×

விஜயதசமியன்று கோயில் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்கும்: ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்

சென்னை: விஜயதசமி நாளன்று கோயில்களை திறப்பது குறித்து, அரசே முடிவெடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருகிறது. கோயில்களில் முக்கிய பூஜைகள் நடத்தப்படவுள்ளதால் அன்றைய தினம் கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டும்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோயிலை திறக்காமல் பிடிவாதமாக உள்ளது. ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோயில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மத்திய அரசின் அறிவிப்பின்படியே வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. அரசுதான் முடிவெடுக்கும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Vijayadasamy , The government will decide on the opening of the temple on Vijayadasamy: Public Prosecutor's information in the iCourt
× RELATED வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று...