×

விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு 2021-22ம் ஆண்டு பருவத்தில், 4000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்துக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.63ம் பச்சைப்பயறுக்கு  ரூ.72.75ம் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். துவரையை பொறுத்தவரை, தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளதால், அறுவடை முடிந்தவுடன், கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொள்முதலுக்காக கொண்டுவரப்படும் உளுந்து, பச்சைப்பயறு ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து, சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருத்தல் வேண்டும்.
 
உளுந்து கொள்முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், பாசிப்பயறு கொள்முதல்  சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் 1.10.2021 தொடங்கி 90 நாட்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறுக்கான தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

Tags : Government of Tamil Nadu , Direct purchase of lentils and green beans from farmers: Government of Tamil Nadu Announcement
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...