தமிழகத்தில் ஒருபோதும் பாஜ காலூன்ற முடியாது: முத்தரசன் உறுதி

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் பாஜ வளர்ந்து விட்டதாக ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஒருபோதும் பாஜ காலூன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலையில் இணைந்தனர். அப்போது அவர் அளித்த பேட்டி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறையில், 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் மிக கடுமையான நடவடிக்கைக்கு பிறகு, ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும், பிரதமர் கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் அவர் தயாராக இல்லை.

இது வன்முறை, படுகொலையை பிரதமர் ஆதரிப்பதை போலவும், ஊக்குவிப்பதை போலவும் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை இணை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து பிரதமர் மாறவில்லை என்றால், எதிர்காலத்தில் மோடி அரசு நிறைவேற்றிய வேளாண்மை திருத்த சட்டங்கள், மின் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் தவறான வழிகாட்டுதல்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய்க்கு கீழே தர முடியும். தமிழக அரசு பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்தபோது, ஒன்றிய அரசு ஒரு பைசா கூட குறைக்காதது வருத்தம் அளிக்கிறது. ஜி.எஸ்.டி. முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜ வளர்ந்து விட்டதாக ஒருவித மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜ காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More