×

ஊராட்சி தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வி.! ‘ஒற்றை ஓட்டு பாஜ’: இந்திய அளவில் டிரெண்டிங்

பெ.நா. பாளையம்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது. அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தன. திமுகவை சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றார். பாஜ மாவட்ட நிர்வாகி கார்த்திக் ஒரு ஓட்டு மட்டும் வாங்கி இருந்தார். அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது நகைச்சுவையாக பேசப்பட்டது. அவர் வாங்கிய அந்த ஒரு ஓட்டும் அவர்  போட்டதுதானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா? என்று அந்த பகுதிவாசிகள் கேள்வி எழுப்பினர். தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே அவர் வீடு வீடாக சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டோக்கள் ஒட்டிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வாக்கு கேட்டார்.

அப்படி இருந்தும் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கார்த்திக் அதே ஊராட்சியின் 4வது வார்டு எ.கே.எஸ் நகர் பகுதியில் குடியிருக்கிறார். ஆனால், 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ள 5 பேரும் அவருக்கு வாக்களிக்க முடியாமல் போனது.
கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றது சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆளது. ‘‘ஒற்றை ஓட்டு பாஜ’’ என சமூக வலைத்தளங்களில் கார்த்திக் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு அக்கட்சி உறுப்பினர்களே வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது.

‘‘ஒரு ஓட்டு வாங்கியதே எனக்கு வெற்றிதான்’’

ஒரு ஓட்டு பெற்ற கார்த்திக் கூறுகையில், நான் கோவை வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய துணை தலைவராக உள்ளேன். தற்போது, சமூக வலைதளங்களில் 9வது வார்டில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதாக கூறி வருகின்றனர். இது  தவறான செய்தி.
நான் இருப்பது 4வது வார்டில். எனது குடும்பத்தினருக்கு அங்குதான் ஓட்டு உள்ளது. 9வது வார்டில் இடைத்தேர்தல் வந்ததால் அங்கு சென்று போட்டியிட்டேன்.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக சரியாக  பிரசாரம் செய்ய முடியவில்லை. நான் யாரிடமும் சென்று போட்டியிடுவதாகவும் கூறவில்லை. அதனால் தான் எனக்கு ஒரு ஓட்டு கிடைத்தது. இதனையே, நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன். அடுத்த முறை 4வது வார்டில் நின்று, நன்றாக வேலை செய்து மிகப்பெரிய வெற்றியை அடைவேன். என் கட்சிக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

Tags : India , Defeat in the panchayat election by buying a vote.! ‘Single Drive Baja’: Trending in India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...