திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக 3ல் வெற்றி

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 4 ஒன்றியக்குழு உறுப்பினர், 4 ஊராட்சி மன்ற தலைவர், 47 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 47 ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 30 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் சேர்த்து 25 இடங்களுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் 15வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் ருக்குமணி ரவிச்சந்திரன் 758 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேவி 4 சுயேட்சை வேட்பாளர்கள் விட குறைவாக 221 வாக்குகளே பெற்று 6வது இடத்தில் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார்.

இதேபோல் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் 18வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் வரதராஜன் 983 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் மகேந்திரன் சுயேட்சை வேட்பாளரை விட கூடுதலாக 911 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக வேட்பாளர் ஆலயசாமி 630 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார். திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் 1வது ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் அம்மு 2389 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வாணி 1411 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கோவிந்தம்மாள் 98 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் அதிமுக வேட்பாளரை விட  திமுக வேட்பாளர் அம்மு 977 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பூண்டி 3வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் காண்டீபன் 1831 வாக்குகளும், அதிமுக கூட்டணி சார்பில்  புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் காயத்ரி 1862 வாக்குகளும், அமமுக வேட்பாளர் செல்லையன் 59 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் மணி 6 வாக்குகளும் பெற்றனர். பதிவான வாக்குகளில் 34 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

திமுக வேட்பாளர் காண்டீபனை விட அதிமுக கூட்டணியின் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் காயத்திரி 31 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான வெற்றி சான்றிதழ் தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியசங்கரி வழங்கினார். இதேபோல், 4 ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பூந்தமல்லி ஒன்றியம், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக ச.அண்ணாகுமார், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் தாமனேரி ஊராட்சி மன்ற தலைவராக கி.கிரி, மீஞ்சூர் ஒன்றியம் ஆலாடு ஊராட்சி மன்ற தலைவராக என்.பிரசாத், திருவெள்ளைவாயல் ஊராட்சி மன்ற தலைவராக சு.முத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழினை வழங்கினர். 17 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களுகான பதவிப்பிரமாணம் வரும் 22ம் தேதியும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் வரும் 20ம் தேதியும் நடைபெற உள்ளது.

Related Stories:

More
>