×

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதில் 3231 மில்லியன் கன நீர் சேமிக்கலாம். மேலும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கன வரத்து கால்வாயில் பருவமழையினால் ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் 1600 கன அடி வந்தது. நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 500 கன அடி நீர் வீதம் வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

எனவே நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1002 கன அடி வீதம் வந்தது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தில் 34.05 அடி உயரமும், 2839 மில்லியன் கன அடி கொள்ளவாகவும் தண்ணீர் உயர்ந்தது. எனவே, அணைக்கு வரும் நீர் வரத்து 34.5 அடியை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் 3 மற்றும் 13 ஆகிய 2 மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 1000 கன அடி தண்ணீர் வீதம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீரை திறந்து விட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்த தண்ணீர் வினாடிக்கு 346 கன அடியாக குறைந்து விட்டது. இதனால் 3 மற்றும் 13 ஆகிய 2 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டிருந்த உபரி நீரை குறைத்து வினாடிக்கு தலா 250 கன அடி வீதம் 500 கன அடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.

Tags : Boondi Reservoir , Reduction of 500 cubic feet per second of water opening from Boondi Reservoir
× RELATED கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்த்தேகத்திற்கு 500 கன அடி நீர் திறப்பு