தொடரும் பொருளாதார தடை.! வடகொரிய பிரச்னைக்கு அமெரிக்கா தான் காரணம்: அதிபர் கிம் ஜோங் உன் குற்றச்சாட்டு

சியோல்: ‘கொரிய தீபகற்பத்தில் நிலையற்ற தன்மைக்கு மூல காரணமே அமெரிக்காதான்’ என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறி உள்ளார். கடந்த 2017ல் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தொடர்ச்சியாக அணு ஏவுகணைகளை சோதனை செய்து உலகையே மிரட்டி வந்தார். பின்னர், அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி கிம் ஜோங்கை சமாதானப்படுத்தினார். சோதனைகளை இழுத்து மூடினால் பொருளாதார தடைகளை நீக்குவதாக அதிபர் டிரம்ப் கூறினார். அதை நம்பிய வடகொரிய அதிபர் கிம், தனது நடவடிக்கையை மாற்றிக் கொண்டார். ஆனால் அமெரிக்கா சொன்னபடி எந்த பொருளாதார தடையையும் நீக்கவில்லை.

இதனால், கடுப்பான கிம், கொரோனா கலவரத்தால் சற்று அடக்கி வாசித்த நிலையில், ‘சமீபகாலமாக மீண்டும் அணு ஏவுகணை சோதனையை தொடங்கி விட்டார். வடகொரியாவுடன் எந்த பகையும் இல்லை, பேச்சுவார்த்தைக்கு தயார் என தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் பலமுறை அழைப்பு விடுத்தும் வடகொரியா கண்டுகொள்வதில்லை’. இந்நிலையில், பிேயாங்யாங்கில் ஆயுத கண்காட்சியை தொடங்கி வைத்து கிம் பேசுகையில், ‘‘கொரிய தீபகற்பத்தில் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு மூல காரணமே அமெரிக்காதான். எங்களுடன் எந்த விரோதமும் இல்லை என அமெரிக்கா கூறுவதை யாராவது, எந்த நாடாவது நம்புமா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். அவர்களுடன் எங்களுக்கு எந்த விரோதமும் கிடையாது, ஆனாலும் அமெரிக்காவின் எந்த செயல்களும் அவர்களை நம்பும்படியாக இல்லை. வடகொரியாவின் அணு ஆயுத வளர்ச்சி எங்களை தற்காத்து கொள்ளவே தவிர, போர் தொடங்கும் எண்ணம் எங்களுக்கில்லை’’ என்றார்.

Related Stories:

More
>