அடுத்த 22 நாட்களுக்கு கவலையில்லை.! போதுமான நிலக்கரி விநியோகிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘‘அடுத்த 22 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கைவசம் உள்ளது. எனவே மின் தட்டுப்பாடு குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. போதுமான நிலக்கரி விநியோகம் செய்யப்படும்’’ என ஒன்றிய நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார். நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக டெல்லி, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதின. ஒன்றிய மின்சார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நிலக்கரி பற்றாக்குறையால் 115 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு இயல்பை விட குறைவாக உள்ளது. அதே நேரத்தில் 17 மின் நிலையங்களில் கையிருப்பு இல்லை.

மின் நிலையங்களில் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்நிலையில், ஒன்றிய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது‘நிலக்கரிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. நாங்கள் தொடர்ந்து போதுமான நிலக்கரி விநியோகித்து வருகிறோம். இம்மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 1.43 மில்லியன் டன் நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாள் சராசரி 1.51 மில்லியன் டன்னாக உள்ளது’. நேற்று (நேற்று முன்தினம்) ஒருநாளில் மட்டும் 1.95 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நிலக்கரி விநியோகம் அதிகரிக்கப்படும். நவராத்திரிக்குப் பிறகு வரும் 21ம் தேதிக்குப் பிறகு தினசரி விநியோகம் 2 மில்லியன் டன்னை எட்டும். தற்போது 22 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. எனவே மின்தட்டுப்பாடு அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>