மனித உரிமை மீறல் மூலமாக நாட்டுக்கு அவப்பெயரை உருவாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘மனித உரிமை மீறல் மூலமாக நாட்டுக்கு அழியாத தழும்பை சிலர் ஏற்படுத்த முயற்சிப்பதாக’ பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது: ‘மனித உரிமைகள் என்பதற்கு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட விளக்கங்களை அளிக்கின்றனர். மனித உரிமை மீறலை அரசியல் லாபம் மற்றும் நஷ்டம் என்ற ரீதியில் பார்க்கின்றனர்.  இத்தகைய நடத்தையானது மனித உரிமைகளுக்கு மட்டுமல்ல ஜனநாயகத்துக்கு தீங்கு விளைக்கும் செயலாகும்.

தங்களது சொந்த நலன்களை வைத்து மனித உரிமைகள் குறித்து விவரிப்பதால் மக்கள் இதனை வித்தியாசமாக பார்க்கின்றனர். சிலர் மனித உரிமை மீறல் என்ற பெயரில் நாட்டிற்கு அழியாத தழும்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு கழிவறைகள், சமையல் எரிவாயு, மின்சாரம் மற்றும் வீடுகளை பாஜ தலைமையிலான அரசு செய்து கொடுத்துள்ளது. இது அவர்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. 26 வார மகப்பேறு விடுப்பு, பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்,  பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்காக அரசு பணியாற்றி உள்ளது. முத்தலாக்குக்கு எதிரான சட்டத்தின் மூலமாக இஸ்லாமிய பெண்களுக்கு பாஜ அரசானது புதிய உரிமையை வழங்கி உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories:

More
>