×

கடல் வழி பாதுகாப்பு குறித்து இந்திய-அமெரிக்க கடற்படை தளபதிகள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: உலகளவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் வழி பாதுகாப்பு குறித்து இந்திய-அமெரிக்க கடற்படை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க கடற்படை தளபதி மைக்கேல் கில்டே 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய கில்டே, இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் உள்ளிட்ட கடல் வழி பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய கடல்வழி பாதுகாப்பு, அங்குள்ள நிலைமைகள், கடல்வழி பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தளபதிகளும் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக, உலகளாவிய பாதுகாப்பில் இந்தியா நீண்டகால மற்றும் சிறப்பான பங்களிப்பை கொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தளபதி கில்டே புகழாரம் சூட்டினார். இதற்கிடையே, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய குவாட் அமைப்பின் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் கடற்படை போர்பயிற்சியின் 2ம் கட்டம் நேற்று தொடங்கியது. இலங்கையில் ராணுவ தளபதி: இதே போல, இந்திய ராணுவ தளபதி நாரவனேவின் 4 நாள் இலங்கை பயணம் நேற்று தொடங்கியது. இப்பயணத்தில் அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேச உள்ளார்.

Tags : Indo , Indo-US naval commanders discuss maritime security
× RELATED மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசு தீர்வுகாண அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்