சுஷாந்தின் காதலி முதல் ஷாருக்கானின் மகன் வரை பாலிவுட் போதை பிரபலங்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கும் சமீர் வான்கடே: மும்பை காவல்துறை தன்னை உளவு பார்ப்பதாக ஒன்றிய அரசிடம் புகார்

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்தின் காதலி முதல் ஷாருக்கானின் மகன் வரை பாலிவுட் போதை பிரபலங்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கும் ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடேவை, மும்பை காவல்துறை உளவு பார்ப்பதாக அவர் ஒன்றிய அரசிடம் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அவரின் நண்பர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். சுஷாந்தின் காதலி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த பாலிவுட்டே சமீர் வான்கடே என்ற பெயரை கேட்டாலே பீதியடைந்து வருகிறது. சினிமாவில் ‘சிங்கமாக’ வரும் ஹீரோக்கள், தற்போது சமீர் வான்கடே என்ற ‘சிங்கத்தை’ கண்டு நடுங்கி வருகின்றனர். மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநரான ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடே,  விமானப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர், தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் என்று பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்.

அவர் செல்லும் அனைத்து இடங்களில் நேர்மையுடனும், துணிவுடன் பணியாற்றி வருவதால், அவரை ‘குட் மார்க்ஸ்’ லிஸ்டில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வைத்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். இவர் பணியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப் பொருளைக் கைப்பற்றி உள்ளார். சுஷாந்த் தற்கொலை வழக்கில் தொடங்கிய கதை, தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வரை தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது.

பாலிவுட்டில் புழங்கும் போதைப்பொருள் பின்னணியில் உள்ள சர்வதேச போதை கும்பல் குறித்த விபரங்களையும் ஆராயத்தொடங்கி, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த சிலரையும் கைது செய்துள்ளார். போதை மாபியா கும்பலைத் தேடிப்பிடித்து வேட்டையாடிவரும் நேர்மையான அதிகாரியான சமீர் வான்கடேவை பலரும் கொண்டாடி வந்தாலும்கூட, தற்போது அவர் பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக, பாலிவுட் போதை பிரபலங்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிவிடுவதால் அவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சமீர் வாங்கடேவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

குற்றவாளிகளை தூக்கும் நேரத்தில், அவர் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது விவகாரத்தை, பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் ஆர்யன்கானுக்கு ஆதரவாகவும், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்கள் பாலிவுட்டில் மட்டுமின்றி மாநில போலீஸ் நிர்வாகத்திற்கும், போதை பொருள் தடுப்பு பிரிவுக்கும் இடையேயும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மும்பை போலீசார் தன்னை பின்தொடர்ந்து வருவதாக சமீர் வான்கடே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரில், ‘கடந்த சில நாட்களாக மும்பை காவல்துறை அதிகாரிகள் என்னை பின்தொடர்ந்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரிகளை சந்தித்து புகார் கடிதம் அளித்தனர். என்னை பின்தொடர்ந்து உளவு பார்த்த சிசிடிவி காட்சிகளையும், அதற்கான ஆதாரங்களையும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நேரில் சமர்ப்பித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீர் வான்கடே தரப்பில் வெளியான இந்த செய்தியால், போதை பொருள் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் பின்புலத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் வெளியே வருவதற்கு முன்னதாக சமீர் வான்கடே அளித்த ஒரு பேட்டியில், ‘ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைதான வழக்கு வலுவானது. நாங்கள் எங்களது ஆதாரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்’ என்றார்.

மும்பை போலீசில் அரசியல்

மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், கார் வெடிகுண்டு வழக்கில் மற்றொரு போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டதையடுத்து ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில்தேஷ்முக், மும்பையிலுள்ள பீர் பார்கள், ஓட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி  மாமூல் வாங்கிக்கொடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக பரம்பீர் சிங் பரபரப்பு  குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த புகாரால் அனில்தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் பரம்பீர் சிங்கிற்கு எதிராக போலீசில் அடுக்கடுக்காக புகார்கள் வந்தது. அதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் பரம்பீர் சிங், சச்சின் வாசே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ேநரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பரம்பீர் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இன்று (அக். 12) விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில நாட்களுக்கு முன் பரம்பீர் சிங்குக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. மும்பை போலீஸ் நிர்வாகத்திற்கும், ஆளும் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பகையில் ஒருஅமைச்சருக்கு பதவியும், போலீஸ் அதிகாரிக்கு சிக்கலும் ஏற்பட்டது. அதேபோல், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும், மும்பை போலீசுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 மாதம் பணி நீட்டிப்பு

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணை இயக்குநரான சமீர் வான்கடேவின் தாய், கடந்த 2015ம் ஆண்டு காலமானார். அதனால், தனது தாயாரின் ஓஷிவாரா கல்லறைக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு சென்று வருவதுண்டு. இவரை பின்தொடரும் ஓஷிவாரா காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு போலீசார், அவர் செல்லும் மற்ற இடங்களையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். இதையறிந்த சமீர் வாங்கடே, இவ்விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட  ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் உள்ளதால், சமீர் வான்கடேவின் இடமாற்ற பணிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக அவர் பணிநீட்டிப்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: