×

தேனி மாவட்டத்தில் மீண்டும் ‘பகீர்’ 500 ஏக்கர் அரசு நிலங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே 500 ஏக்கர் அரசு நிலங்கள், தனியாருக்கு பட்டா வழங்கியதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சப்-கலெக்டரிடம் நுகர்வோர் அமைப்பினர் மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மேல் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு நிலங்கள் உள்ளன. இவைகள் 2000ம் ஆண்டிற்கு முன்பு வரை, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களாக அரசு ஆவண பதிவேட்டில் உள்ளது.

அதன்பின், அந்த நிலங்கள் அனைத்தும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கி உள்ளதாக தற்போது கணினி மயமாக்கப்பட்ட பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அரசப்பன், கண்ணன், பாண்டி ஆகியோர், 2 ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு ஆவணங்களை பெற்றுள்ளனர். இதில் ஆய்வு செய்தபோது மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை உள்ள அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பதிவேடுகளில் அரசு நிலங்கள் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது கணினி மயமாக்கப்பட்ட பின், அரசு ஆவணங்களில் அரசு நிலம் தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தினர் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப்பிடம், ‘தகவல் அறியும் உரிமைகள் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, 500 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, அந்த அரசு நிலங்களை மீட்க வேண்டும். அரசு நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பட்டா பெற்றவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்’ என கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 100 ஏக்கர் நில மோசடி விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சிக்கி உள்ள நிலையில், பெரியகுளம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கியது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bakir ,Dani ,Ambalam , 'Pakir' 500 acres of government land in Theni district again privatized: RTI shocking revelation
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...