தேசிய திட்ட பணிகள் குழுமம் சார்பில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தேசிய திட்ட பணிகள் குழுமம்  சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினர் விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் என்ற பெயரில் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட வருமுன் காப்போம் திட்டம் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. 1000 இடங்களில் ஆண்டொன்றுக்கு வருமுன் காப்போம் திட்டம் நடத்திட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் 1250 முகாம்கள் ஆண்டொன்றுக்கு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று தமிழகத்தில் 50 இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது. காலை 9 மணிக்கு துவங்கும் முகாம் பிற்பகல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை , மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் ,  குழந்தைகள் நல மருத்துவம் ,  காது மூக்கு தொண்டை,  சிறுநீரகவியல் ,  எலும்பு மூட்டு , இருதய நோய் ,  கண் மருத்துவம் , உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. இவை தவிர 20 வகையான உடல் சோதனைகளும் நடத்தப்படவுள்ளது. தற்போது 331 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்துவிதமான கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதாரத் துறையினர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது, விரைவில் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரப் பணியாளர்களை போல் களப் பணியாளர்களுக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது அவர்களுக்கும்  நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் 4 கல்லூரிகளுக்கு மறுஆய்வு நடத்திட தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டே புதிய மருத்துவ கல்லூரிகள் வாயிலாக 1650 கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி ஆயோக் தரவுகள் படி தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்ட நிலையில் தேசிய திட்ட பணிகள் குழுமம்  சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினர் விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>