ஊட்டியில் கனமழை: ஜி.ஹெச். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

ஊட்டி: ஊட்டியில் கொட்டிய கனமழையால் அரசு மருத்துவமனை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில்  நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய கன மழை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. மழையின் காரணமாக ஊட்டியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், கூட்செட் சாலை, லோயர் பஜார், மார்க்கெட் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கன மழை காரணமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் யாரும் சாலையில் செல்லாத நிலையில், விபத்து தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா, கோலானி மட்டம் போன்ற பகுதிகளில் தாழ்வான விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.

இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கன மழை காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி படகு இல்லத்தில் 2 மணி நேரம் மிதி படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊட்டி மார்க்கெட், லோயர் பஜார் போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories:

More
>