புதுடெல்லியில் ரூ.200 கோடி மதிப்பில் புதிதாக தமிழ்நாடு இல்லம் விரைவில் கட்டப்படும் :அமைச்சர் எ.வ. வேலு தகவல்!!

டெல்லி : புதுடெல்லியில் ரூபாய் 200 கோடி மதிப்பில் 2 இலட்சத்து 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக தமிழ்நாடு இல்லம் விரைவில் கட்டப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.புதுடெல்லி சானக்கியாபுரி கௌடில்ய மார்க்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை மறு புனரமைப்பு செய்யும் திட்டம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசும்  பொழுது குறிப்பிட்டதாவது,

“புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வைகை  என்ற பெயரில் 1962ஆம் ஆண்டு முதல் கட்டடமும், 1965ஆம் ஆண்டு இரண்டு கட்டடங்களும், 1976ஆம் ஆண்டு மேலும் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டது. புது டெல்லியைப் பொறுத்தவரை 50 ஆண்டுகள் முடிந்த கட்டடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம் என்ற விதி உள்ளதால் 50 ஆண்டுகள் தாண்டிய தமிழ்நாடு இல்லக் கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2018 இல் இவற்றில் மூன்று கட்டடங்களை எடுத்துவிட்டு 57 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 18.06.2021 அன்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிரதமரை சந்திக்க டெல்லி வந்த பொழுது இக்கட்டடங்களைப் பார்வையிட்டு பாழடைந்த ஐந்து கட்டடங்களையும் இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் கட்ட முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் இக்கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தங்கும் அறைகள் கட்ட அரசுக்கு துறை அலுவலர்கள் முன் மொழிவு அனுப்பப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டொரு நாளில் இறுதி செய்யப்பட்டு, 2 இலட்சத்து 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூபாய் 200 கோடி மதிப்பில் அழகிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இது குறித்து இன்று தமிழ்நாடு இல்லத்தை நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். கட்டடத்தை இடிக்கும் பணி புதிய கட்டடத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளை துவக்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்டடத்தின் முகப்புத் தோற்றம், கட்டடக் கலை வடிவமைப்பு மற்றும் கட்டடத்தில் அமைக்க வேண்டிய பிற வசதிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இறுதி செய்வார்கள். விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்படும்” என தெரிவித்தார்

Related Stories:

More
>