×

தொலைவில் இருந்து ரசிப்பதே சிறந்தது!: சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 50 நாளில் 13 பேர் கடலில் மூழ்கி பலி..!!

சென்னை: சென்னையில் கடந்த 50 நாட்களில் மெரினா கடற்கரைக்கு வந்த 13 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தடையை மீறி கடலில் இறங்கி அலையில் சிக்கி உயிர்பலி ஏற்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி தடை நீக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மணல் பரப்பில் உற்சாகமாக பொழுதை கழிக்கும் மக்கள், ஆர்வம் மிகுதியால் கடலுக்குள் இறங்கி குளிக்க முற்படுகின்றனர். அப்போது அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த 50 நாட்களில் மட்டும் 13 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் அனைவருமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தான். மெரினாவில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையாக ஒருங்கிணைந்த அவரச உதவி மையம் ஒன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் இதனை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர ஹெலிகாப்டர் ரோந்து மற்றும் படகு மூலமும் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இந்த அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஒரே நேரத்தில் அனைவருக்கும் தகவல் கொடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வாட்ஸ் அப் குழு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. அலையில் சிக்கி கொள்பவர்கள் தொடர்பான தகவலை 949810024 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதனை பதிவு செய்யும் அவசர உதவி மைய காவலர்கள், அதுகுறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் ஒரேநேரத்தில் பகிர்வார்கள். அதனால் மீட்புப்பணி துரிதமடைவதுடன் அலையில் சிக்கி தவிப்பவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும் என்று திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் குளிப்பவர்களை தடுப்பதற்கு தற்போது போலீசாரின் நேரடி ரோந்து பணி நடைமுறையில் உள்ளது. மேலும் மணற்பரப்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் உள்ளது. இதுதவிர நவீன வசதிகளுடன் 3 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவவும் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். மெரினாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வந்தாலும் அங்கு செல்கின்ற பொதுமக்கள் கடலை தொலைவில் இருந்து ரசிப்பது ஒன்றே உயிரிழப்புகளை தடுக்க உதவும்.

Tags : Chennai ,Marina , Chennai Marina Beach, 13 people, killed
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...