×

வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து முதல்வர் நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார் : தமிழக அரசு!!

சென்னை: வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறக்க கோரி கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அடங்கிய விடுமுறை கால அமர்வில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஒரு முறையீட்டை முன்வைத்தார்.

அதாவது, விஜயதசமி தினத்தில் தான் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். அதனால் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், என்றும் முறையிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்திரம், இது சம்மந்தமாக அரசின் கருத்துக்களை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி கட்டுப்பாடுகள் அக் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா விதிகள் புறக்கணிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சண்முகசுந்தரம், முதல்வர் ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாகவும் அந்த ஆலோசனையில் கோவில்களை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், கோவில்களை திறப்பது தொடர்பாக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் வழக்கில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.

Tags : Chief Minister ,Vijayadasami ,Government of Tamil Nadu , வெள்ளிக்கிழமை,விஜயதசமி,கோயில்,ஹைகோர்ட், அவசர
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...