×

தண்ணீர் குழாயை உடைத்த விவகாரம்: அதிமுக எம்எல்ஏவின் தந்தை மீது வழக்கு

சேலம்: சேலம் அருகே தண்ணீர் குழாயை உடைத்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவின் தந்தை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி பூதனூரை சேர்ந்தவர் ராஜா மகன் பிரபாகரன் (38). இவரது வீட்டருகே மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. கடந்த 29ம் தேதி, அதேப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி, குமரவேல் ஆகிய இருவரும் அந்த குடிநீர் தொட்டியின் குழாயை உடைத்தனர். இதனை பார்த்த பிரபாகரன், தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அவரை அசிங்கமாக பேசி திட்டிவிட்டு, இருவரும் சென்றுள்ளனர். பின்னர், அன்றைய தினம் மாலையில் பிரபாகரனின் விவசாய கிணற்றில் இருந்து வீட்டிற்கு வரும் தண்ணீர் குழாயை நல்லதம்பி, குமரவேல் ஆகிய இருவரும் கடப்பாரை, மண்வெட்டியால் வெட்டி உடைத்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என பிரபாகரன் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு பெரியேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி தான், குழாயை உடைக்க சொன்னார். மீறி பேசினால் வெட்டி சாய்த்து கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி தொளசம்பட்டி போலீசில் பிரபாகரன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தொல்காப்பியன் விசாரணை நடத்தி, நல்லதம்பி, குமரவேல், ஊராட்சி மன்ற தலைவரான ராமசாமி ஆகிய 3 பேர் மீது குழாயை உடைத்து சேதப்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஊராட்சி மன்ற தலைவரான ராமசாமி, ஓமலூர் அதிமுக எம்எல்ஏ மணியின் தந்தை ஆவார். இவ்வழக்கு தொடர்பாக மேல் விசாரணையை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நடத்தி வருகின்றனர். இதனால், கைது நடவடிக்கை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Tags : AIADMK , Water pipe breaking case: Case against AIADMK MLA's father
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...