கொடுங்கையூர் குப்பை மேட்டில் கட்டிட கழிவில் இருந்து ஜல்லி; 2 வகை மணல் தயாரிக்கும் திட்டம்: அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பையின் அளவை குறைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் குப்பைகளை மறுசுழற்சி செய்து அவற்றை உரம் தயாரிக்க பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகிறது. பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் அதிகளவு குப்பை கொட்டப்படுகிறது.  

கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட 8  மண்டலங்களில் இருந்து குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகிறது.  அந்த வகையில், தினமும் 2 ஆயிரம் டன் முதல் 2,200 டன் வரை குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையில் இருந்து கட்டிட கழிவு, மரக்கழிவு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் சாலை விபத்து ஏற்பட்டு  வருகிறது.

இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மாஸ் கிளீனிங் எனப்படும் நிகழ்ச்சி மூலம் ஆங்காங்கே கொட்டி வைத்திருந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தி குப்பை கிடங்குகளில் கொட்டிவருகின்றனர். அதன்படி கொடுங்கையூர் குப்பை கிடங்கில் டன் கணக்கில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதை மறுசுழற்சி செய்து ஜல்லி மற்றும் மணல் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கட்டிட  கழிவுகளை அப்புறப்படுத்தி குப்பை மேட்டின் ஒரு பகுதியில் கொட்டி தரம் பிரிக்கவும், அதன்பிறகு ராட்சத இயந்திரங்கள் மூலம்  கட்டிட கழிவுகளை பொடியாக்கி அதிலிருந்து 3 விதமான ஜல்லி, எம்சான்ட் மணல் உள்ளிட்ட இரண்டு விதமான மணல் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான சோதனை திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இதில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி மற்றும்  உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னையில் கட்டிட கழிவுகள் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்கு காரணம், கட்டுமான பணி நடைபெறும்போது காலியாக உள்ள இடங்களிலும் சாலைகளிலும் கட்டிட கழிவுகளை வீடு கட்டுபவர்கள் கொட்டுகின்றனர். அதன்பிறகு அதை அப்புறப்படுத்துவதில்லை.

இதனால் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. சென்னையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு குப்பை கிடங்குகளில் கொட்டி தரம்பிரித்து மணல் மற்றும் ஜல்லியாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் 2 தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சியில், பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பகுதி செயலாளர் முருகன், வட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>