வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் சீமான்!: நடவடிக்கை கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு..!!

சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சைபடுத்தி பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் அண்மைக் காலமாக விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூறி பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரை சீண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால் கடும் கோபத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் சீமான் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜோதிமணி, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அரசியல் இருக்க வேண்டும். ஆனால் சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது போல் பேசி வருகிறார் என குறிப்பிட்டார். தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் சீமான் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.

மேலும், அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் சீமான், வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடி கொள்கிறார் என்றும் சீமானின் கொள்கைகள் எடுபடாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார் என்றும் ஜோதிமணி குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து, இறந்துபோன தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியானது அல்ல என தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, சீமான் இத்தகைய அவதூறு பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories:

More
>