டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்ட விவகாரம்!: வழக்‍கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்..!!

டெல்லி: குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா பணி ஓய்வுபெற 4 நாட்களே இருந்த நிலையில் டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1984ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, இறுதியாக எல்லை பாதுகாப்பு படை பிரிவின் டேரக்டர் ஜென்ரலாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வுபெற இருந்த அவரை, பணி ஓய்வுக்கு 4 நாட்களுக்கு முன்னர் டெல்லி காவல்துறை ஆணையராக நியமித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது. இதற்கு டெல்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகேஷ் அஸ்தானாவின் நியமனம் சட்டவிரோதமானது என டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே அஸ்தானாவின் நியமனத்திற்கு எதிராக எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படி பணி நீட்டிப்பு நியமனம் செய்ய ஓய்வுபெற குறைந்தபட்சம் 6 மாத காலமாவது இருக்க வேண்டும் என்றும் ஆனால் அஸ்தானா நியமனத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு அனைத்து விதிகளையும் மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சக அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அச்சமயம், டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: