அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தலை தடுக்க சிசிடிவி கேமராக்களை முறையாக இயக்க, கண்காணிக்க நடவடிக்கை-புதுகையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பேட்டி

புதுக்கோட்டை : மத்திய மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குவதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று புதுக்கோட்டையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களுடைய குழந்தைகளை பணி நேரத்தில் பராமரிப்பதற்கு ஆயுதப்படை அலுவலகம் அருகே காவல்துறை குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஐஜி பாலகிருஷ்ணன் கூறியதாவது:

மத்திய மண்டலத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ளது என்று கூற முடியாது கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் 30 மணி நேரத்திலேயே காவல்துறையினர் சிறப்பாக கண்டுபிடித்து குழந்தையை மீட்டனர்.அதற்கு முக்கியமான காரணம் அந்த மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கியது தான்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தான் கடத்தி சென்ற பெண் குறித்து தகவல் தெரியவந்ததுஎனவே மத்திய மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

பழுது ஏற்பட்டிருந்தால் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறி பகுதி சீர் செய்யப்பட்டு வருகிறது சிசிடிவி கேமரா முறையாக இயங்குவதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாலியல் தொந்தரவுகள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கு காவல் துறையுடன் சமூகநலத்துறை இணைந்து செயல்பட்டு அதிக அளவு வழக்குகள் பதியப்பட்டு வருவதால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுஇது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம அளவில் போக்சோ சட்டம் குறித்து கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

போக்சோ குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரித்திர பதிவேடு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதுமத்திய மண்டலத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் காவலர்களும் அடிமையாகி இழக்கக்கூடிய சூழ்நிலை சமீப காலமாக இருந்து வருகிறது. காவல்துறையினருக்கும் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் விபரீதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

காவலர்கள் பணி நேரத்தில் குழந்தைகள் பராமரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் இதர காவலர்கள் தங்களுடைய குழந்தைகளை பணி நேரத்தில் முறையாக கண்காணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் இந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து செல்லலாம். காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள், கல்வி கற்பதற்கு புத்தகங்கள், சுவற்றில் ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் மாதங்கள் ஆங்கில மாதங்கள் ஆகியவை எழுதப்பட்டுள்ளது காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இவை கற்றுத் தரப்பட உள்ளது.

Related Stories:

More
>