திருச்சுழியில் மயானத்திற்கு அடிப்படை வசதி-திமுக ஒன்றிய தலைவர் நடவடிக்கை

திருச்சுழி : தினகரன் செய்தி எதிரொலியால், திருச்சுழி மயானத்திற்கு அடிப்படை செய்து தர, திமுக ஒன்றியத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருச்சுழியில் 2000க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரின் வடக்கு பகுதியில் ஆற்றின் கரையோரம் மயானம் உள்ளது. இங்கு தண்ணீர், மின்விளக்கு வசதியின்றி முட்செடி படர்ந்து காணப்பட்டது. மயானம் செல்லும் பகுதியில் மின்வயர் தாழ்வாக செல்லுவதால், இறந்தவர்களின் கொண்டு செல்ல சிரமப்பட்டனர். மேலும், தண்ணீர் வசதியில்லாததால், பிரேதத்துடன் குடத்தில் தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது.

இரவு நேரத்தில் மரணமடைந்தாலும் தீப்பந்ததோடு பிரேதத்தை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதனையறிந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தலின்பேரில், திருச்சுழி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, திருச்சுழி மயானத்திற்கு சென்று அடிப்படை தேவைகளான தண்ணீர், மின்சார வசதி, குளியல் தொட்டி கட்ட பொதுநிதியில் இருந்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மயானத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி, நாகமூர்த்தி, பொறியாளர்கள் உடன் சென்றனர்.

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் கூறுகையில், ‘கடந்த 2010ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தண்ணீர் வசதி, குளியல் தொட்டி போன்ற பணிகளை

செய்திருந்தோம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சுழி மயானத்தை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால், திருச்சுழி மக்கள் அவதிக்குள்ளாகினர்’ என கூறினார். உடனடியாக மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர முன்வந்த ஒன்றிய பெருந்தலைவர் முன்வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: