×

ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி கிராமங்களில் பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்கள்-திறந்தவெளிக்கு செல்லும் மக்களுக்கு சுகாதாரக்கேடு

சிவகாசி : சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி, செங்கமலபட்டி கிராமங்களில் சுகாதார வளாகங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்களுக்கு பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் எம்எல்ஏ நிதி, பொதுநிதி, உள்கட்டமைப்பு நிரப்புதல் நிதி உட்பட பல்வேறு அரசின் வளர்ச்சி நிதியில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகங்கள் சில பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த போதிலும் பெரும்பாலான கிராமங்களில் பூட்டிக் கிடக்கின்றன. சில கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் அவலநிலை தொடர்கின்றது. இந்த கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த கிராமத்தில் போதிய சுகாதார வசதி இல்லை. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதததால் கிராம மக்கள் கண்மாய், முள்வேலி செடிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பூட்டிக் கிடக்கிறது. கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது.

தனி நபர் கழிப்பிட திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் சேதமடைந்தும் குப்பைகள் பழைய துணிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி செய்து சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து செங்கமலபட்டி காங்கிரஸ் பிரமுகர் ஆறுமுகம் கூறும்போது, ‘சுகாதார வளாகங்களை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளி கழிப்பிடம் அபாயம், ஆபத்து குறித்து கிராம மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுகாதார வளாகங்களை ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரித்து கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய வேண்டும். கிராம சுகாதாரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதனை ஊராட்சி நிர்வாகங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முயற்சி எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Tags : Alamarathupatti ,Sengamalapatti , Sivakasi: Health complexes in Alamarathupatti and Sengamalapatti villages near Sivakasi are open to the public.
× RELATED பட்டாசு தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் கைது