ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு சாலையோரங்களில் காய்கறி விற்பனை ஜோர்

ஊட்டி : ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், சாலையோரத்தில் மலை மற்றும் சைனீஷ் காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது. நீலகிரி  மாவட்டத்தில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், வெள்ளை பூண்டு, பட்டாணி, டபுள் பீன்ஸ், மேரக்காய் உட்பட பல்வேறு  காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. அதே போல், பல்வேறு வகையான கீரை வகைகளும்  விளைவிக்கப்படுகிறது.

இது தவிர தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளிலும் சைனீஷ் வகை காய்கறிகள் மற்றும் கிரைகள் அதிகளவு  பயிரிடப்படுகிறது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும்  நிலையில், பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில்  விளைவிக்கப்படும் கேரட் மட்டும் பறித்து விற்பனை செய்து வந்தனர். இதனை  அதிகளவு சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது இரண்டாம்  சீசன் நடந்து வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும்  ஊட்டிக்கு வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு  வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கவே தற்போது ஊட்டியில்  பல்வேறு பகுதிகளிலும் மலை காய்கறி, சைனீஷ் வகை காய்கறிகளை விற்பனை செய்ய  விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து  கோத்தகிரி செல்லும் சாலையோரங்களில் கோடப்பமந்து பகுதிகளில் அதிகளவு  சுற்றுலா பயணிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரட்,  பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், சைனீஷ் கேபேஜ், சுக்கினி மற்றும்  பல்வேறு வகையான கீரை வகைகள் ஆகியவைகளை தங்களது தோட்டங்களில் இருந்து  பறித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

இதனை சுற்றுலா பயணிகள் வாங்கிச்  செல்கின்றனர். இதனால், ஊட்டி - கோத்தகிரி சாலையில் பல்வேறு பகுதிகளிலும்  விவசாயிகள் இது போன்று மலை காய்கறிகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.

Related Stories:

More
>