×

3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை மருத்துவமனை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது-படகு சவாரி நிறுத்தம்

ஊட்டி :  ஊட்டியில்  நேற்று பெய்த கன மழையால், ஊட்டி அரசு மருத்துவமனை தடுப்புச்சுவர் இடிந்து  விழுந்தது. நீலகிரி  மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையும்,  அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய கன மழை  சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. மழையின் காரணமாக ஊட்டியில் தாழ்வான  பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம்,  கூட்செட் சாலை, லோயர் பஜார், மார்க்கெட் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி  நின்றது. படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 கன மழை காரணமாக ஊட்டி அரசு  மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து  அருகில் உள்ள சாலையில் விழுந்து. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் யாரும்  சாலையில் செல்லாத நிலையில், விபத்து தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த  தடுப்புச்சுவர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.  ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா, கோலானி மட்டம் போன்ற பகுதிகளில்  தாழ்வான விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. இதனால், விவசாயிகள்  பாதிக்கப்பட்டனர்.

கன மழை காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி படகு  இல்லத்தில் 2 மணி நேரம் மிதி படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வாகனங்களை நோக்கி  விரைந்தனர். அதுமட்டுமின்றி, அனைவரும் மதிய உணவிற்காக நகருக்குள் வந்ததால்,  சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கன மழை காரணமாக சாலைகளில்  மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, ஊட்டி மார்க்கெட், லோயர் பஜார்  போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை  ஏற்பட்டது.

Tags : Ooty: The retaining wall of the Ooty Government Hospital collapsed due to heavy rain in Ooty yesterday. The last three in the Nilgiris district
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி