கண்டக்டரிடமிருந்து மனைவியை மீட்கக்கோரி குழந்தைகளுடன் கணவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி : ஆசை வார்த்தைக்கூறி தனது மனைவியை கடத்தி சென்ற கண்டக்டரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி கணவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள், மகனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அவர் தான் மறைத்து எடுத்து வந்த கேனிலிருந்த மண்ணெண்ணெயை தன் தலையிலும், பிள்ளைகளின் தலையிலும் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்கப் போவதாக சத்தம் எழுப்பினார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், பொதுமக்கள் அவர்களை மீட்டனர். அவர்களது மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர்.

இதுகுறித்து பெரியசாமி கூறுகையில், ‘எனது மனைவி கடந்த 24ம் தேதி காலை எட்டு மணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. துறையூர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனால் எனது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை.

இரவில் அம்மாவை அழைத்து வாருங்கள் என கூறி அழுதபடியே உள்ளனர். குழந்தைகள் சாப்பிடுவதும் இல்லை. அந்த நபர் ஏற்கனவே பல பெண்களை இதபோல் ஆசை வார்த்தை கூறி சீரழித்துள்ளார். இதில் எனது மனைவியையும் ஏமாற்றியுள்ளார். பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இப்படி செய்துவிட்டோம்’ என்றார்.போலீசார் அவர்களை சமாதானம் செய்து மனு அளிக்கும்படி கூறி அனுப்பினர்.

Related Stories:

More
>