×

ஜோலார்பேட்டை அருகே மின்விளக்குகள் பழுதால் இருள் சூழ்ந்த மேம்பால சாலையில் அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே உள்ள மேம்பால சாலையானது பல வருடங்களாக இருளில் மூழ்கி வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் ரயில்வே மேம்பால சாலை உள்ளது. இந்த சாலையானது பல்வேறு கிராமங்களுக்கும், நாட்றம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் மேம்பாலம் புதிதாக அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டும் மேம்பால சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் ஒளிர்ந்தது. அதன் பிறகு அடுத்த சில மாதங்களிலேயே ஒவ்வொரு மின் விளக்குகளும் பழுதான நிலையில் நெடுஞ்சாலைத்துறை, கிராம ஊராட்சி கண்டுகொள்ளாததால் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்த மேம்பால சாலை இரவில் வெளிச்சமின்றி இருளில் மூழ்கி உள்ளது.

இந்த சாலை வழியாக பல்வேறு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயணிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே இந்த சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் இந்த ரயில்வே மேம்பால சாலையில் மின்விளக்குகள் சீரமைக்க வேண்டுமென பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும்  துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் மேம்பால சாலைக்கு செல்லும் ரவுண்டானா பகுதியில் நாட்றம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலம், வேலூர், திருப்பத்தூர் செல்லும் முக்கிய சாலைகள் பிரிகின்ற சந்திப்பாக உள்ளது. இங்கு மின் விளக்குகள் எரியாமல் இருந்து வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் சிலரால் சாலைகளில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருளில் மூழ்கிக் கிடக்கும் ரவுண்டானா பகுதி மற்றும் ரயில்வே மேம்பாலம் சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு எரியாமலும் உள்ளதை சீரமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க  வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jolarpet , Jolarpet: The flyover near Jolarpet has been in darkness for many years.
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...