திருப்பத்தூர் பழைய பஸ் நிலையத்தில் கழிவுநீருடன் கலந்து குளம்போல் தேங்கிய மழைநீர்-நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 1.50 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் ஷேர் ஆட்டோக்கள், லாரிகள், அம்மா உணவகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது. மேலும் கட்டண கழிப்பிடம் உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

இந்த மழை நீர் கால்வாய் நிரம்பி அருகே உள்ள கட்டண கழிப்பிடத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி பழைய பஸ் நிலையம் முழுவதும் குளம்போல் தேங்கி உள்ளது. கழிவு நீருடன் கலந்த மழை நீர் பழைய பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசி அங்கு உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அருகே உள்ள அம்மா உணவகத்தில் வரும் ஏழை எளிய மக்களும் துர்நாற்றத்துடன் அங்கு உள்ள உணவை அருந்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கழிவுநீர் தேங்கி இருப்பதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி அருகே உள்ள கடைக்காரர்கள் மற்றும் மாய பிள்ளையார் கோயில் தெரு, பழனிசாமி ரோடு, பெரியகுளம் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கு கொசு தொல்லைகள் அதிகரித்து துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த கழிவுநீரை அகற்ற கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். மேலும் இது குறித்து கலெக்டர் இடமும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கழிவு நீருடன் மழை நீர் கலந்து செல்லும் கால்வாயை தூர்வார பழைய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>