நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தப்பிய ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் கேமராவில் பதிவு!: விரைவில் பிடிபட வாய்ப்பு..வனத்துறையினர் நிம்மதி..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தப்பிய T-23 புலியின் உருவம் 8 நாட்களுக்கு பிறகு தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று 4 மனிதர்களை கொன்றது. இதனால் புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூர் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க, 17 நாட்களாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கூடலூரில் தேடுதல் பணியின்போது தேயிலைத் தோட்டத்தில் இரண்டு முறை அந்த புலி தென்பட்டும், கால்நடை மருத்துவர்களால் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த முடியாமல்போனது. 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள், நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள், பரண்கள், சிறப்பு அதிரடிப் படையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கேரள, கர்நாடக வனத்துறை எனப் பெரும் பட்டாளமே புலியை தேடி வந்தது.

இந்நிலையில், T-23 புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டிருக்கிறது. மசினகுடி வனப்பகுதியில் இருந்து சென்ற T-23 புலி முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட போஸ்பெரொ அருகே இருப்பது தெரியவந்துள்ளது. ஓம்பெட்டா வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவாகியுள்ளது. இதையடுத்து மசினகுடியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் போஸ்பெரொ விரைந்துள்ளனர். தேவன் எஸ்டேட் மற்றும் மேல்பீல்டு பகுதிக்கு புலி செல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதால் அங்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். போஸ்பெரொ பகுதி மக்களுக்கு புலியின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 8 நாட்களுக்கு பிறகு புலி நடமாடும் பகுதி கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது விரைவில் பிடிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: