×

கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக - அதிமுகவினர் இடையே கூச்சல், குழப்பம்!: ஒரு மணி நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்..!!

கரூர்: கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட கடும் கூச்சல், குழப்பம் காரணமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டு, க.பரமத்தி ஒன்றிய குழு உறுப்பினர், திக்கலவாய் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து உட்பட 15 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான வாக்குப்பதிவானது கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டுகளிலும் 20,432 ஆண்கள், 22,231 பெண்கள், 4 இதர வாக்குகள் என மொத்தம் 42,677 வாக்குகள் உள்ளது. தொடர்ந்து, 9ம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் 16,643 ஆண்கள், 18,497 பெண்கள் என மொத்தம் 35,141 வாக்குகள் பதிவானது. இதன் சதவீதம் 82.36 ஆகும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகிறது. தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கரூரில் தான்தோன்றிமலையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கு எண்ணும் பணியின் வரிசை எண்ணும், வாக்கு எண்ணும் அறையின் மேசையில் போடப்பட்டிருந்த எண்ணும் மாறுபட்டு இருந்தது. இதனால் திமுக - அதிமுகவினர் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து பதியப்பட்ட வாக்குசீட்டில் இரு பக்கமும் அச்சிடப்பட்ட சீல் வைக்கப்பட்டிருந்ததால் திமுக - அதிமுகவினர் அதிகாரிகளிடம் அதிருப்தியை தெரிவித்தனர். ஒருகட்டத்தில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பதற்றமானது. அங்கு விரைந்த அதிரடி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


Tags : Karur , Karur, Counting Center, DMK - AIADMK, push
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்