பெட்ரோல், டீசல் விலை உயர்வால்தான் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிந்தது!: ஒன்றிய இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி சர்ச்சை கருத்து..!!

திஸ்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபட்டதால் தான் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாக ஒன்றிய பெட்ரோலிய இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயை கடந்துள்ளது. சில மாநிலங்களில் டீசல் விலையும் 100ஐ தாண்டியுள்ளது. இப்படி தினம் தினம் விலை உயர்ந்து கொண்டு போவதால் வாகன ஓட்டிகள் கலங்கி போயுள்ளனர். ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

தொடரும் எரிபொருள் விலையால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நிலையில் அசாமில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நிதி ஆதாரங்களை திரட்டுவதில் முக்கிய அங்கம் என்று தெரிவித்தார். மேலும் பெட்ரோல் விலையை விட இமயமலை தண்ணீர் பாட்டிலின் விலை அதிகம் என்று குறிப்பிட்ட அவர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிந்ததாக கூறினார்.

130 கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். இந்த தடுப்பூசியின் விலை 1200 ரூபாய். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 40. மற்றவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் தான் என்று பேசி இருக்கிறார். ஒன்றிய பெட்ரோலிய இணை அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>